Friday, 6 July 2012

நில் கவனி காதலி..!

அமாவாசை இரவில்கூட
நிலாச்சோறு சாப்பிடலாம்.....
அருகில் நீ இருந்தால்......
                                                                 
                                                                   

உன் தங்க நிறத்துக்காக மட்டுமல்ல
உன் தங்க குணத்துக்காகவும்
எழுதித் தரலாம் தமிழ்நாட்டை....


      
                                                                         
ரசிகனாகவே இருந்துவிட
நான் தயார்...
கடைசிவரை நான் ரசிக்கும்
கவிதையாக
நீ இருப்பாயேனில்..... 
                                                                        
                                                                                              -மணி மைந்தன்

Monday, 30 April 2012

காதல் கடிதம்..!

அழகான தேவதைக்கு,
என்றுதான் உனக்கான எனது கடிதத்தை துவங்குகிறேன். ஏனெனில் உன் பெயர் தெரியாத தருணங்களில் உனக்கு நான் வைத்திட்ட  பெயர் அதுதான்..
                                                                             

பொதுவாக எனக்கு பேருந்து பயணங்கள் பிடிப்பதில்லை,ஏனெனில் சுதந்திரமாக நடக்க முடியாது.... நிம்மதியாக அமர முடியாது, ஆனாலும் உனக்காக எனது பயணங்கள் நீண்டு கொண்டே போயிருக்கின்றன... அந்தப் பயணங்களில் உனக்காக நான் பலமுறை கை வலிக்க , கால் கடுக்க பேருந்தில் தொங்கியிருக்கிறேன். அப்பொழுதும் கூட என்னுடைய பாதுகாப்பு வளையம் உன்னைச் சுற்றியே இருக்கும்... 

                                                                          
அந்தப் பயணங்களுக்கான  அர்த்தம் கற்பித்தவள்  நீ. உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நாம் பயணம் செய்த அந்த வழியில் நாம் தினமும் ஒரு சிறிய கோவிலைக் கடக்க வேண்டியது வரும். அந்த கோவிலில் காசை எடுத்து வீசினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை .



ஒருநாள் பொழுது அந்தப் பயங்கரப் பயணத்தில் உனக்காக நான் ஒரு, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வீசினேன் .எதற்காக வீசினேன் ?, என்ன நினைத்துக் கொண்டு வீசினேன் என்பதெல்லாம் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை .ஒருவேளை நீ என்னை அங்கீகரித்தால் உனக்காக நான் வீசிய அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மீட்டெடுத்து உன் கையில் கொடுத்தால் எவ்வழவு மகிழ்ச்சியாய் இருப்பாய் எண்டு நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.. ஆனால் இன்னமும்  புதைந்து  கிடக்கிறது எனது விருப்பமும், காதலும், அந்த நாணயமும்...!

                                                                           
நீயோ இன்று என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாய் , ஆனாலும் உன் மீதான என் காதல் மழை இன்னமும் பெய்து கொண்டேதான் இருக்கிறது.  நீ குடை கொண்டுவர மறந்திட்டா நாட்களில் மட்டுமே என் மழை உனக்குப் புரிகிறது.. என்ன செய்ய? நீ இன்று குடையோடு போகிறாய்...




குதிரையாக உன் நினைவு, அதன் மேல் சவாரி செய்யும் நோஞ்சான் வீரனாக நான்...இப்பொழுது நான் உன்னிடமிருந்து விலகியும், விலகாமலும் இருந்து கொள்கிறேன்.  பரவாயில்லை, நான் தோற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்... நான் உன்னிடம் ஏமாந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.. 
நீயாவது ஜெயித்தாயா? எந்த ஒரு இழிசொல்லையும் தாங்காது அழுதிட்ட நீதானா அது? என்னைத் தவிர மற்ற அனைவருக்காகவும் இரக்கப்பட்ட நீதானா அது? காலைப் பொழுதுகளில் பள்ளிக்கு கிளம்பி உன்னுடன் பயணிக்க வைத்திட்ட நீதானா அது?
 உனக்கான அடையாளங்களை நீ  எங்கு தொலைத்துவிட்டாய் ?    நெற்றிபரப்பில் பதியமிட்டிருக்கும் உன் அழகிய பொட்டு எங்கு விழுந்தது?
கடைசியில் என்னுடைய உன்னை நீ எங்கே தொலைத்து விட்டாய்?


நான் என்ன பெரிய இவன்? நான் நானாக இருக்கிறேன். என்னை நான் இகழ்கிறேன், பரிகசிக்கிறேன், ரசிக்கிறேன், காதலிக்கிறேன். ஏனெனில் நானொரு கற்பனாவாதி, கவிஞன். அன்றும் இன்றும் நே என் மனதில் வந்து போனபடியே இருந்தாய், இனியும் இருப்பாய். இதனால் நீ என்னைக் கிறுக்கன் என்று நினைத்து விட்டாய் என்று எண்ணுகிறேன்.

                                                                         


இப்போது நீ என்னை விரும்பாமல் போகலாம், என்னைப் பற்றிய நினைவு உனக்கு வெறுப்பை ஊட்டலாம். ஆனால் என்னுடைய உள்மனதில் உன்மீதான என் பிரியங்களும், எந்தன் காதல் உணர்வும்,ஆற்று மணலாய் , மென்மையாய்,  நகராமல்  ஒரு அழகான ஓவியமாய் படிந்து இருக்கின்றன.. 
உனக்கு நீச்சல் அடிக்கத் தெரிந்தால் அந்த மணலை நீ காணலாம், ஒரு பிடி அள்ளிப் போகலாம், உனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதது எப்படி என் குற்றமாகும்? நீ என்னைச் செருக்குடையவன் என்று நினைக்கிறாய். சரி! இருந்து விட்டுப் போகட்டும். அதில் என்ன தவறு? சொல்லப் போனால் இந்தச் செருக்கு உன் காதலன் என்ற காரணத்தினால் எனக்கு வந்திருக்கலாம்.




பொறுப்பற்றவன், கேவலமானவன், தோற்றவன்,  லாயக்கற்றவன் கோபக்காரன் என்று எத்தனையோ சொல்லிவிட்டுப் போ.. காதல் என்றால் என்ன?என்று என் நண்பன் ஒருநாள் கேட்டான். இப்போது சொல்கிறேன்.
' காதல் கடக்கும்போது இனிக்கிறது, கடந்தபின் கசக்கிறது'

                                                                       

என்றாவது ஒருநாள் நாம் பயணம் செய்த அந்த வழியாக நீ செல்லக் கூடும். அன்று  உனக்காக நான் வீசிய ஒற்றை ரூபாய் நாணயம் புதைந்த மணலை நீ காணக் கூடும். நன்றாக உற்றுப் பார்! அங்கு எஞ்சியிருப்பது என்னுடைய காதல் மட்டும்தான்..                



                                                                                                        உன் மீது பிரியமுள்ள 
                                                                                                                 சேவகன்    
நன்றி : விகடன்


(அந்த சிறிய கோவிலின் பெயர் அரைக்காசு காளியம்மன் கோவில், தொன்டி-மதுரை நெடுஞ்சாலையில் சிவகங்கைக்கு அருகில் பையூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.)

Monday, 23 April 2012

வரம் நீ...



 ஆண்டவனிடம் நான்
அழுது வேண்டிய
ஒரே வரம் நீ...
அவன்
அளிக்க மறந்திட்ட
வரமும் நீயே....
                           -மணி மைந்தன்.

Wednesday, 4 April 2012

உனக்கானவை...

 

 படிக்காமலே புரிந்துகொள்கிறார்கள் 
 என் கவி ரசிகைகள்....
 அத்தனை கவிதைகளும் 
உனக்கானவை என்பதை...!
                     =மணி மைந்தன்

Saturday, 24 March 2012

என் நாட்குறிப்பு......!



உன்னைக் காணாத நாட்களின்
வெறுமையான  பக்கங்களில் 
உனக்கானதொரு
கவி எழுதி 
நிரப்பச் சொல்லி நச்சரிக்கிறது 
என் நாட்குறிப்பு......!
-மணி மைந்தன்

Tuesday, 20 March 2012

ஊஞ்சல்.....


உன் வீட்டு பால்கனியில்
நீ
ஊஞ்சலாடும் போதெல்லாம்
ஊசலாடுகிறது 
என் உயிர்....!
                           - மணி மைந்தன்

Thursday, 8 March 2012

அறிமுகம்...

உனக்கே தெரியாமல் 

உன்னை அனைவரிடமும் 

அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன்... 



இதுவரை 

அறிமுகம் செய்து கொண்டதில்லை ... 

என்னை நான் 

உன்னிடம்...!
                                     - மணி மைந்தன்

Thursday, 1 March 2012

என் அம்மா ...



என் அம்மாவை எங்கேனும் எவரேனும் காண நேரிட்டால் என்னிடம் தெரிவியுங்கள். அங்க, அடையாளங்கள் கொண்டு அவளை கண்டு கொள்ள முடியாது. குணநலன்களை கூறுகிறேன், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
                          
    Ø  சூரியன் சுட்டெரிக்கும் வேளைகளில் தன்னந்தனியாக விறகு சுமந்து சென்று கொண்டிருப்பாள்,
    Ø  பகலிரவு நேரம் பார்க்காது காட்டிலும், மேட்டிலும் இயற்கையோடு போராடிக்கொண்டிருப்பாள்.
    Ø  அந்திம வேளைகளில் வேலைக் களைப்பால் மயங்கி இருந்த ஒரு சேலையையும் துவைத்து விட்டு அது காயும்வரை தண்ணீருக்குள் அமர்ந்திருப்பாள்.

    Ø  சில நேரங்களில் எதையோ நினைத்து அழுவாள்... எதையோ சிந்தித்து சிரிப்பாள்..
    Ø  ஆறேழு பெண்கள் கூடு இடங்களில் தன இல்லாமையை மறைக்க சேலைத் தலைப்பால் மூடியிருப்பாள். ஆனால் கண்களின் கடைக் கோடியில் ஒரு சொட்டு கண்ணீர் உருண்டு வந்து நின்று கொண்டிருக்கும்,
    Ø  அழும் குழந்தையை அமர்த்த இருக்கும் கடைசி ரொட்டித் துண்டையும் கொடுத்து விட்டு அழகாக சிரித்துக் கொண்டிருப்பாள்.

    Ø  படிக்க வசதியில்லாமல் இருக்கும் ஏதேனும் ஒரு சிறுவனை        கட்டிட வேலைக்குச் சென்றாவது படிக்க வைத்துக்கொண்டிருப்பாள்.
    Ø  ஒரு நாள் சம்பளம் வைத்து இருவருக்கு உதவிக் கொண்டிருப்பாள்.
    Ø  அடுத்தவர் இடுக்கண் கண்டு இரங்கல் வேண்டும் என்று எவருக்கேனும் உரைத்துக் கொண்டிருப்பாள்.
    Ø  பசித்த பொழுது கண்டு புசிக்க வைத்துக் கொண்டிருப்பாள்.
    Ø  ரசமும், பொரியலும் மட்டுமே வைக்கத் தெரிந்திருந்தாலும் தன் மகனை ரசாயனப் பொறியாளனாக ஆக்கியிருப்பாள்.
    Ø  கணவன் கைவிட்ட தருணங்களில் கூட தன்மானம் தழுவாது வாழ்ந்து காட்டியவள், நிச்சயமாய் உழைத்துத்தான் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பாள்.
    Ø  அத்துவானக் காடுகளில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தாலும், பாம்பு திரியும் வயல்வெளிகளில் களை எடுத்துக் கொண்டிருந்தாலும், அடித்து நொறுக்கும் மழை நேரங்களில் சுண்ணாம்பு கலவை சுமந்து கொண்டிருந்தாலும் எவருக்கேனும் உதவி என்று கேட்டவுடன், துடித்துக் கொண்டு ஓடி வரும் ஒரு பெண்ணை எங்கேனும்,  எவரேனும் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.
                  அவள்தான் என் அம்மா....!
                                                                            -மணி மைந்தன்



Monday, 27 February 2012

அறிவியல் அதிசயம்..!

நமக்குள் ஒரு 
அறிவியல் அதிசயம்...
ஒவ்வொரு முறையும் - என்னுள் 


கவிதையை 
கருத்தரிக்க வைப்பவள் நீ..
பிரசவிப்பவன் நான்...!
                                  - மணி மைந்தன்

Thursday, 23 February 2012

தென்றல் நகர்...


தென்றல் நகருக்குள்
  
நீ  நடந்து செல்லும்போதெல்லாம்



புயல் அடித்துச் செல்கிறது 

எனக்குள்.....
                       -மணி மைந்தன்

Monday, 13 February 2012

நம் காதல்....!

எதைப் பற்றி 
எழுத அமர்ந்தாலும் 
எதுவும் ஒழுங்காக 
எழுதி முடிக்கப் பட்டதில்லை

என்னால்
எழுத முடிந்த ஒரே கரு 
நம் காதல்....!
          -மணி மைந்தன்
இனிய காதலர் தின வாழ்த்துகள்.. 

Monday, 23 January 2012

கடவுளும் காதலும்..

இல்லாத கடவுளை
இருக்கின்றது என்கிறது  உலகம்..

இருக்கும் காதலை 
இல்லை என்கிறாய் நீ..
                  -மணி மைந்தன்

Sunday, 1 January 2012

வருக 2012..!

புத்தாண்டு பிறந்து விட்டது....
புதிய நம்பிக்கைகளுடன் , புதிய கனவுகளுடன் இந்த புதிய வருடத்தை வரவேற்போம்...

வழக்கம்போல் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள், இனைய வேண்டிய போராட்டங்கள் நம் கண் முன்னே விரிந்து கிடக்கின்றன..
வாழ்வின் ஆதாரங்களை சுரண்டும் நமது நாட்டின் அரசியல்'வியாதிகளின்' குறைகளையும் எடுத்துரைத்து போராடுவோம்..
என்றும் நட்பு வாயிலாக நம் உணர்வுகளுக்கு  உயிர் கொடுப்போம் நண்பர்களே...!                            

                      நன்றியுடன்
                                    மணி மைந்தன் .