அழகான தேவதைக்கு,
என்றுதான் உனக்கான எனது கடிதத்தை துவங்குகிறேன். ஏனெனில் உன் பெயர் தெரியாத தருணங்களில் உனக்கு நான் வைத்திட்ட பெயர் அதுதான்..
பொதுவாக எனக்கு பேருந்து பயணங்கள் பிடிப்பதில்லை,ஏனெனில் சுதந்திரமாக நடக்க முடியாது.... நிம்மதியாக அமர முடியாது, ஆனாலும் உனக்காக எனது பயணங்கள் நீண்டு கொண்டே போயிருக்கின்றன... அந்தப் பயணங்களில் உனக்காக நான் பலமுறை கை வலிக்க , கால் கடுக்க பேருந்தில் தொங்கியிருக்கிறேன். அப்பொழுதும் கூட என்னுடைய பாதுகாப்பு வளையம் உன்னைச் சுற்றியே இருக்கும்...
அந்தப் பயணங்களுக்கான அர்த்தம் கற்பித்தவள் நீ. உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நாம் பயணம் செய்த அந்த வழியில் நாம் தினமும் ஒரு சிறிய கோவிலைக் கடக்க வேண்டியது வரும். அந்த கோவிலில் காசை எடுத்து வீசினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை .
ஒருநாள் பொழுது அந்தப் பயங்கரப் பயணத்தில் உனக்காக நான் ஒரு, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வீசினேன் .எதற்காக வீசினேன் ?, என்ன நினைத்துக் கொண்டு வீசினேன் என்பதெல்லாம் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை .ஒருவேளை நீ என்னை அங்கீகரித்தால் உனக்காக நான் வீசிய அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மீட்டெடுத்து உன் கையில் கொடுத்தால் எவ்வழவு மகிழ்ச்சியாய் இருப்பாய் எண்டு நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.. ஆனால் இன்னமும் புதைந்து கிடக்கிறது எனது விருப்பமும், காதலும், அந்த நாணயமும்...!
நீயோ இன்று என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாய் , ஆனாலும் உன் மீதான என் காதல் மழை இன்னமும் பெய்து கொண்டேதான் இருக்கிறது. நீ குடை கொண்டுவர மறந்திட்டா நாட்களில் மட்டுமே என் மழை உனக்குப் புரிகிறது.. என்ன செய்ய? நீ இன்று குடையோடு போகிறாய்...
குதிரையாக உன் நினைவு, அதன் மேல் சவாரி செய்யும் நோஞ்சான் வீரனாக நான்...இப்பொழுது நான் உன்னிடமிருந்து விலகியும், விலகாமலும் இருந்து கொள்கிறேன். பரவாயில்லை, நான் தோற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்... நான் உன்னிடம் ஏமாந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்..
நீயாவது ஜெயித்தாயா? எந்த ஒரு இழிசொல்லையும் தாங்காது அழுதிட்ட நீதானா அது? என்னைத் தவிர மற்ற அனைவருக்காகவும் இரக்கப்பட்ட நீதானா அது? காலைப் பொழுதுகளில் பள்ளிக்கு கிளம்பி உன்னுடன் பயணிக்க வைத்திட்ட நீதானா அது?
உனக்கான அடையாளங்களை நீ எங்கு தொலைத்துவிட்டாய் ? நெற்றிபரப்பில் பதியமிட்டிருக்கும் உன் அழகிய பொட்டு எங்கு விழுந்தது?
கடைசியில் என்னுடைய உன்னை நீ எங்கே தொலைத்து விட்டாய்?
நான் என்ன பெரிய இவன்? நான் நானாக இருக்கிறேன். என்னை நான் இகழ்கிறேன், பரிகசிக்கிறேன், ரசிக்கிறேன், காதலிக்கிறேன். ஏனெனில் நானொரு கற்பனாவாதி, கவிஞன். அன்றும் இன்றும் நே என் மனதில் வந்து போனபடியே இருந்தாய், இனியும் இருப்பாய். இதனால் நீ என்னைக் கிறுக்கன் என்று நினைத்து விட்டாய் என்று எண்ணுகிறேன்.
இப்போது நீ என்னை விரும்பாமல் போகலாம், என்னைப் பற்றிய நினைவு உனக்கு வெறுப்பை ஊட்டலாம். ஆனால் என்னுடைய உள்மனதில் உன்மீதான என் பிரியங்களும், எந்தன் காதல் உணர்வும்,ஆற்று மணலாய் , மென்மையாய், நகராமல் ஒரு அழகான ஓவியமாய் படிந்து இருக்கின்றன..
உனக்கு நீச்சல் அடிக்கத் தெரிந்தால் அந்த மணலை நீ காணலாம், ஒரு பிடி அள்ளிப் போகலாம், உனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதது எப்படி என் குற்றமாகும்? நீ என்னைச் செருக்குடையவன் என்று நினைக்கிறாய். சரி! இருந்து விட்டுப் போகட்டும். அதில் என்ன தவறு? சொல்லப் போனால் இந்தச் செருக்கு உன் காதலன் என்ற காரணத்தினால் எனக்கு வந்திருக்கலாம்.
பொறுப்பற்றவன், கேவலமானவன், தோற்றவன், லாயக்கற்றவன் கோபக்காரன் என்று எத்தனையோ சொல்லிவிட்டுப் போ.. காதல் என்றால் என்ன?என்று என் நண்பன் ஒருநாள் கேட்டான். இப்போது சொல்கிறேன்.
' காதல் கடக்கும்போது இனிக்கிறது, கடந்தபின் கசக்கிறது'
என்றாவது ஒருநாள் நாம் பயணம் செய்த அந்த வழியாக நீ செல்லக் கூடும். அன்று உனக்காக நான் வீசிய ஒற்றை ரூபாய் நாணயம் புதைந்த மணலை நீ காணக் கூடும். நன்றாக உற்றுப் பார்! அங்கு எஞ்சியிருப்பது என்னுடைய காதல் மட்டும்தான்..
உன் மீது பிரியமுள்ள
சேவகன்
நன்றி : விகடன்
(அந்த சிறிய கோவிலின் பெயர் அரைக்காசு காளியம்மன் கோவில், தொன்டி-மதுரை நெடுஞ்சாலையில் சிவகங்கைக்கு அருகில் பையூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.)




No comments:
Post a Comment