என் அம்மாவை எங்கேனும் எவரேனும் காண நேரிட்டால்
என்னிடம் தெரிவியுங்கள். அங்க, அடையாளங்கள் கொண்டு அவளை கண்டு கொள்ள முடியாது.
குணநலன்களை கூறுகிறேன், கவனமாகக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.
Ø சூரியன் சுட்டெரிக்கும் வேளைகளில் தன்னந்தனியாக விறகு
சுமந்து சென்று கொண்டிருப்பாள்,
Ø பகலிரவு நேரம் பார்க்காது காட்டிலும், மேட்டிலும்
இயற்கையோடு போராடிக்கொண்டிருப்பாள்.
Ø அந்திம வேளைகளில் வேலைக் களைப்பால் மயங்கி இருந்த ஒரு
சேலையையும் துவைத்து விட்டு அது காயும்வரை தண்ணீருக்குள் அமர்ந்திருப்பாள்.
Ø சில நேரங்களில் எதையோ நினைத்து அழுவாள்... எதையோ சிந்தித்து
சிரிப்பாள்..
Ø ஆறேழு பெண்கள் கூடு இடங்களில் தன இல்லாமையை மறைக்க சேலைத்
தலைப்பால் மூடியிருப்பாள். ஆனால் கண்களின் கடைக் கோடியில் ஒரு சொட்டு கண்ணீர்
உருண்டு வந்து நின்று கொண்டிருக்கும்,
Ø அழும் குழந்தையை அமர்த்த இருக்கும் கடைசி ரொட்டித்
துண்டையும் கொடுத்து விட்டு அழகாக சிரித்துக் கொண்டிருப்பாள்.
Ø படிக்க வசதியில்லாமல் இருக்கும் ஏதேனும் ஒரு சிறுவனை கட்டிட
வேலைக்குச் சென்றாவது படிக்க வைத்துக்கொண்டிருப்பாள்.
Ø ஒரு நாள் சம்பளம் வைத்து இருவருக்கு உதவிக் கொண்டிருப்பாள்.
Ø அடுத்தவர் இடுக்கண் கண்டு இரங்கல் வேண்டும் என்று
எவருக்கேனும் உரைத்துக் கொண்டிருப்பாள்.
Ø பசித்த பொழுது கண்டு புசிக்க வைத்துக் கொண்டிருப்பாள்.
Ø ரசமும், பொரியலும் மட்டுமே வைக்கத் தெரிந்திருந்தாலும் தன்
மகனை ரசாயனப் பொறியாளனாக ஆக்கியிருப்பாள்.
Ø கணவன் கைவிட்ட தருணங்களில் கூட தன்மானம் தழுவாது வாழ்ந்து
காட்டியவள், நிச்சயமாய் உழைத்துத்தான் உயிர் வாழ்ந்துகொண்டிருப்பாள்.
Ø அத்துவானக் காடுகளில் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தாலும்,
பாம்பு திரியும் வயல்வெளிகளில் களை எடுத்துக் கொண்டிருந்தாலும், அடித்து
நொறுக்கும் மழை நேரங்களில் சுண்ணாம்பு கலவை சுமந்து கொண்டிருந்தாலும் எவருக்கேனும்
உதவி என்று கேட்டவுடன், துடித்துக் கொண்டு ஓடி வரும் ஒரு பெண்ணை எங்கேனும், எவரேனும் கண்டால் என்னிடம் சொல்லுங்கள்.
அவள்தான் என் அம்மா....!
-மணி மைந்தன்




No comments:
Post a Comment