Sunday, 25 December 2011

பாதுகாப்பு...

உன் வீட்டாருக்குத் தெரியாமல் 
நீ 
பாதுகாத்து வைத்திருக்கும் 
என் 
கவிதை நோட்டைப் போல்


பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன்
உன் மீதான 
எந்தன் காதலை...!
              -மணி மைந்தன்

Wednesday, 21 December 2011

கவிதை நோட்டு...

என்னிடத்தில் இருந்து 
நீ வாங்கிச் சென்ற - என் 
கவிதை நோட்டில் 
கடைசிப் பக்கம் 
காலியாகவே இருக்கும்... 
                  
முடிவுரை  எழுதி 
முடித்து விடு... - அல்லது
 முன்னுரை எழுதி 
தொடங்கி விடு ...
என் கவிதையையும் -கூடவே 
என் காதலையும்...
                -மணி மைந்தன்

Saturday, 17 December 2011

கவிக் குழந்தை..!

எந்தன் ஒவ்வொரு 
தனியான பயணங்களும் 
பிரசவித்து விடுகின்றன...

உனக்கானதொரு அழகான
கவிக் குழந்தையை....
                 -மணி மைந்தன்

Friday, 16 December 2011

களைப்பு...!

 
உன்னை தவிர 
ஒவ்வொருவரிடமும்  
உன் மீதான 
என் காதலைச் சொன்ன 
    களைப்பில்தான் கழிகின்றன    
                                                         என் ஒவ்வொரு பொழுதும்...!
                            - மணி மைந்தன்  

Wednesday, 7 December 2011

எழுத வைத்தவள்...

ஒவ்வொரு  கவிதை
எழுதிய பின்னரும் 
எனக்கு சந்தேகம் வருவதுண்டு
எழுதியது நான்தானா என்று ....


ஒவ்வொரு கவிதையும்
சொல்லி விடுகின்றன... 
எழுத வைத்தவள் 
நீ என்று....
           -மணி மைந்தன்

Thursday, 1 December 2011

மரணம்..!

நான்கு தினங்களுக்கு முந்தைய இரவில் நண்பன் விஜயிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது. வேலைக் களைப்பின் இடையில்  பேசியபோது ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. அவனுடைய தந்தை எனக்கு மாமா ஒரு விபத்தில் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தான். அதன் பின் மற்ற நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து அடித்துப்பிடித்து, நள்ளிரவு 1  மணிக்கு பஸ் பிடித்து மதுரை அரசு மருத்துவமனை சென்று ஆறுதல் சொல்லி, உடலை ஊருக்கு எடுத்து சென்ற பொது ஊரே அழுதது . பின்னர் மறுநாள் இரவு கிளம்பி சென்னை வந்து சேர்ந்தேன்.. பயணத்தின் போது பல நினைவுகள் என்னுள் நிழலாக ஆடின.. எப்பொழுதும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அந்த மாமா உடலை அடக்கம் செய்ய தூக்கி சென்ற போது தூக்கிய கைகளையும், தோளையும் விட மனசு அதிகம் வலித்தது.

எந்த ஒரு மரணமும் அவர்களின் அன்புக்குரியவர்களிடம் ஒரு இழப்பை பதிவு செய்து விடுகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாமல் சிவகங்கை  அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்த பொழுது ஒரு சிறிய பெண்ணை அனுமதித்திருந்தார்கள்.இரவு பாம்பு கடித்து விஷம் ஏறியதால் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்கள். விஷம் இறங்கி  விட்டதால் பயம்  இல்லை  என்று  கூறிவிட்டு  சென்றுவிட்டார்கள். காலையில் எழுந்து அழகாக பல் விளக்கிக் கொண்டிருந்த பெண்ணை சிறிது நேரத்தில் பிணமாக தள்ளிச் சென்றார்கள் .


இன்னொரு முறை நண்பன் ஒருவன் இரவு முழுவதும் எங்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றான்.. காலையில் அவன் விஷம் குடித்து  இறந்து விட்டதாக போன் செய்தார்கள்.. மச்சான்  கரிகாலன் நான் மதுரை சென்றிருந்த பொழுது எங்கள் ஊர் தெப்பக்குளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கிறார்கள். எத்தனையோ முறை நானும் அவரும் ஒன்றாக பல கிணற்றில் குளித்திருக்கிறோம்.


திடீர் மரணங்கள்தான் நம்மை திகைக்க வைத்து விடுகின்றன. அடுத்த வீட்டில் தீப்பற்றும் போது அணைக்க ஓடுபவனின் மனநிலையில்தான் அடுத்தவர்களின் மரணத்திற்கு ஓடும்போதும் இருக்கின்றோம். காலையில் நம்முடன் உணவருந்தியவர்களுக்கு மாலையில் வாய்க்கரிசி போடுகின்றார்கள்.  பிறகும் குழந்தைகள் ஏன் பிறந்தோம் என்று தெரியாமலேயே இறந்து விடுகின்றன. உலக மகா பணக்காரனும் இறந்த பின் ஓலை பாடை கட்டிய ஒப்பனையுடன் செல்கிறான். வெட்டு  வாங்கியன் வலிகளை மறந்து வெட்டியவனை  நோக்கி ஓடுகிறான்..



ஒருமுறை பிணவறைக்கு அருகில் நின்ற பொழுது ஒரு சிறுவனின் பிணம் வெளியே வந்தது. அடிபட்ட அறிகுறியே இல்லாமல் அழகாக படுத்திருந்தான்.  நன்றாக உற்றுப் பார்த்த பொழுது கழுத்தின் அருகில் சிறிது உறைந்த ரத்தம் .
நனன்பர்களுடன் மரத்தில் விளையாடிய பொழுது மரக்கிளை முறிந்து குச்சி கழுத்தில் குத்தியதால் உடனடி மரணம். அரைநிமிடம் முன்பு வரை தங்களுடன் விளையாடிய நண்பன் இறந்து போனதை ஜீரணிக்க முடியாமல் திகைத்து நிற்கிறார்கள் சிறுவர்கள்.


மேற்று முன்தினம் வரை லிபியாவின் முடி சூடிய மன்னராக வலம் வந்த கடாபியை நேற்று புரட்சிப் படையினர் நாயைப் போல கொன்ற தகவல்கள் வருகின்றன.. இறந்து போனவர்களின் வலியையும் சேர்த்து  அனுபவிக்கிறார்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் அன்புக்குரியவர்கள்..





இதற்கிடையில் அடுத்தவர்களின் கஷ்டங்களை எண்ணிப்பார்க்கதவர்கள், சுயநலவாதிகள், அளவுக்கு அதிகமாக பணம் சேர்ப்பவர்கள், குடியால் சுற்றி இருக்கும் அனைவரையும்  துன்புறுத்துபவர்கள், யாரையும் மதிக்காதவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள், சக உயிர்களிடத்தில் அன்பு செலுத்தாதவர்கள், அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன் .வாழ்க்கை என்னவென்பது புரிய வேண்டுமென்றால் கொஞ்சம் அரசு மருத்துவமனை பிணவறை வரை சென்று வாருங்கள். உங்கள் சக தோழர்கள் உங்களைப் போலவே வாழ்ந்தவர்கள் அங்கே  இடமின்றி கிடத்தி வைக்கப் பட்டிருக்கலாம்..




தற்கொலை முடிவில் இருக்கும் நண்பர்களே தாராளமாக செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன நிபந்த்தனை. உங்கள் உயிருக்கு  பதிலாக வழ வேண்டும் என்று நினைத்திருந்த ஒருவரின் சடலத்தை உயிர்ப்பித்து விட்டுச் செல்லுங்கள். யாருக்கும்  உதவாத சுயநலவாதி மனிதர்களே , சாகும்  போது நீங்களே போய் சுடுகாட்டில் படுத்துக் கொள்ளுங்கள். இரண்டு  மாதத்திற்கு முன்பு   தூரத்து உறவு பெரியப்பா ஒருவர் விபத்தில் இறந்ததால் வீட்டுக்கு சென்றிருந்தேன். 80  கிலோ உடம்பை ஒரு சிறு துணியில் கட்டிக் கொடுத்தார்கள். ஒரு மனிதனுடன் கடைசிவரை செல்வது அந்த துணிதான்..



ஆனாலும் அடுத்த மரணச் செய்தி வரும்வரை மறுபடியும் அனைத்தையும் மறந்து ஆளாய்ப் பறக்கிறார்கள் இந்த அப்பாவி மனிதர்கள்...
                                                                
                                                                            -   நன்றியுடன் மணி மைந்தன்

மறுப்பு...!

நீ 
வரப் பிரியப்படாத 
என் வாழ்க்கைப் பாதையை 
தொடர மறுக்கிறது
என் காதலும்
காமமும்....! 

Saturday, 26 November 2011

நம் காதல்

நம் காதல் தவிர 
வேறு எதைப் பற்றியாவது 
எழுதலாம் என
தினமும் முயற்சிப்பேன்...
எதைப் பற்றியும் எழுத விட்டதில்லை
நம் காதல்... .
 -மணி மைந்தன்

Friday, 25 November 2011

முடியல...

என்னதான் நான் 
இரசாயனப் பொறியியல்
(CHEMICAL ENGG)
பயின்றிருந்தாலும்,
உன்னை காணும்போது
எனக்குள் நிகழும்
இரசாயன மாற்றங்களை மட்டும் 
புரிந்துகொள்ளவே முடிவதில்லை...!
                                                                          -மணி மைந்தன்

Thursday, 24 November 2011

அன்பு அம்மாவிற்கு....

உலகின் ஒளி
வருத்துகிறது அம்மா 
குவார்ட்டரில் விஷம் 
கலந்து வருகிறேன் 
உன் கருவறை இருளில் 
செத்துப் போக 
உன் நைந்த புடவையில் 
தூக்கிட்டுச் சாகும்
வரம் வேண்டும் 
தா தாயே  


  
காமம் கரைந்து விட்டது
குடி அலுத்து விட்டது
உயிரின் மறுபக்கம்
ஒட்டிக் கிடக்கும் உன்
புகைப்படத்தை இப்போதுதான் 
பார்த்தேன் என் அம்மா 
என்ன செய்தேன் உனக்கு
பொய்களை பரிசளித்தேன்
போதாமையில் தவிக்க விட்டேன் 
உன் புருஷனின் சாயல் கொண்டேன்
இருந்தும் என்னை
மன்னிக்கும் உனது கண்ணீரில்
எனது மரணம் 
புன்னகைக்கிறது அம்மா


அழுக்கு முந்தானையில் 
அழும் பிள்ளையோடு 
தாய் தந்த பிச்சையிலே பாடும் 
குருட்டு சிறுக்கி
என்னை மிதித்துக் கொன்றால் 
மகிழ்ந்து மரிப்பேன்...


சதை எறிந்த
சிதை மேட்டில் 
என்ன செய்கிறாய்
சின்னப் பையா 
அம்மா போய் விட்டாள்
அப்பாவிடம் கோபித்துக் கொண்டு...



காய்த்த உன் கைகளை
தடவினேனில்லை
வெடித்த உன் பாதங்களை
வருடினேனில்லை
நீ வரக்கூடாத 
இடுகாட்டில் அம்மா 
என் பிணத்தை 
நாய்கள் தின்னட்டும்


கருவறையில் புரண்டவன்
கடைசிவரை திருந்த மாட்டான்
என தெரிந்த பிறகும் 
முத்தமிடுகிறாய்
முலைப்பாலிட்ட 
அதே அன்போடு 


அகாலத்திலும் இருமும் 
பேரழகி பெருந்தேவி 
உன் நெஞ்சுச் சளிஎல்லாம்
நெய்யாகி எரியுதடி 
என் 'உயிர் விளக்கு' 


தற்கொலை முயற்சியில்
பிழைத்து
நீ மருத்துவமனையில் 
இருந்த இரவில்  
அழுது கொண்டே 
அத்தை வீட்டில்
சாப்பிட்டவன் நான் 
அம்மா ஐ லவ் யூ...





(இரண்டு வருடங்களுக்கு முன்பு ரசித்த கவிதை ,
எப்போது படித்தாலும் கண்ணில் நீர் வரவழிக்கும் வரிகள்)      
            

Tuesday, 22 November 2011

என் காதல்...!

உன்னைப் பற்றிய நினைவுகளை 
கவிதைகளாக பதியச் சொல்லி
நச்சரிக்கிறது
உன்னால் கைவிடப்பட்ட 
எனது தனிமை 


அம்மாவிடம் அழுது புலம்பியும் 
அந்த பொம்மையை
அடைய முடியாத 
அப்பாவி குழந்தையின் 
ஏமாற்றத்தில் தெரிகிறது
உனக்கான எனது காதல்


உனக்கான கவிதைகளில் 
நான் உருவாக்கிய 
உவமைகளிலும்
உருவகங்களிலும்
உடனிருந்தே பயணப் படுகிறது
எனது சிந்தனை...


 நீ இல்லாது
நகர்ந்து விட்டன
நாட்கள் நூறு 
ஆச்சர்யம்தான் எனக்கும்
நீ இல்லாது விலகும்
வெற்றுக் கணத்தில் 
வீழ்ந்து விடுவேன்-என்றுதான்
எண்ணியிருந்தேன்


 கவிதைத் தோழன்தான் 
காப்பாற்றியிருக்கிறான்
நம் காதலையும் சேர்த்து...


உன்னிடம் பேசத் தவறிய
வார்த்தைகளையும் சேர்த்து
வரைந்து விட்டது-என் கரம் 
பேனா வழியாக 
கவிதைகளாக...


 நீ
பிரயானப்படும் பொழுதுகளில் 
உன்னைப் பின்தொடரும் 
என்னை திரும்பி பார்த்து -நீ 
குறைத்துக் கொண்டே செல்லும்
இடைவெளியில் நிரம்புகிறது..
நமக்கான காதல்...



நீ ஓட்டி செல்லும் 
மிதிவண்டி கூட சமயங்களில்
இறக்கை இல்லாத 
விமானமாகத்தான் தெரிகிறது 
எனக்கு...



அன்றொரு  நாள்  நாம் 
கல்லூரிக்குள் நிறுத்தி வைத்திருந்த 
சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று 
பிணைந்திருந்தன...
காதலுக்குப் பின் 
நாம் இருக்கப்போகும் 
நிலையை ஞாபகப் படுத்திய படி...



மொழிகள் பல 
கற்றதும் சரி
மறந்ததும் சரி
அனைத்தும் உன்னால்...



நீ புலர வைத்த 
பொழுதுகள் எத்தனை என 
எண்ணிப்பார்க்கின்றேன்
கணக்கின் கால் 
வழுக்கி விடுகின்றது...



நீ வந்து 
வசித்த பின்னர்தான் 
'காளையார்கோவில்' எனக்கு 
காதலியார் கோவில்  ஆனது...



நீ வந்து சென்ற 
பேருந்தின் கைப்பிடியில் 
பதிந்திருக்கின்றன
உன் கைரேகையும் 
அதன்மேல் என் கைரேகையும்
 
 

 நம் இருவருக்குமிடையில்
பரவிக் கிடக்கும்
பரிதவிப்புகளில் -என்னை
நான் மீட்டுக் கொள்கிறேன்
உன்னிடமிருந்து...



காலம் கடந்துவிட்ட-என்
காதலை எத்தனை முறைதான் 
காட்டிக் கொடுப்பது 
உன்னிடம்?


எப்பொழுதும் உன்னிடம் 
விளையாடிக்  கொண்டிருக்கும் 
உன் வீட்டு 
செல்ல நாய்க்குட்டி கூடவா 
சொல்ல வில்லை ?
பூட்டியிருக்கும் என்று 
தெரிந்திருந்தும் உன் வீட்டிற்கு 
ஒவ்வொரு 
ஓணம் பண்டிகைக்கும் 
வாழ்த்து சொல்ல 
ஓயாமல் வந்து செல்லும் 
என்னைப் பற்றி... 
                   -மணி மைந்தன் 




(அவளை விட்டு பிரிந்து  முதன் முதலாக சென்னை சென்ற பொது தனிமையில் எழுதிய கவிதை.
*காளையார்கோவில் என்பது எங்கள் ஊர்..
*ஓணம் பண்டிகைக்கு கேரளம் சென்று விடுவது அவள் வீட்டார் வழக்கம். )

Monday, 21 November 2011

போராட்டம்

போராட்டமே வாழ்க்கை என்று ஆன பிறகு வெற்றியா? தோல்வியா? என்பது முக்கியம் அல்ல.. இறுதி வரை போராட வேண்டும் என்பதே முக்கியம்....  

Saturday, 19 November 2011

நீ நான் காதல்...!

நீ 
நான் 
காதல் 
இந்த மூன்று வார்த்தைகள் 
தவிர்த்து வேறு ஏதேனும்
கவிதை எழுத முயற்சிப்பேன்
இதுவரை முடிந்ததில்லை...!  
                                                                                   -மணி மைந்தன்

யாசகம்

எல்லோரும் கவி எழுத 
தனிமையில் யோசிப்பார்கள் ....
நான் மட்டும் 
உன் புகைப்படத்திடம்   
யாசிப்பேன்...!
                               -மணி மைந்தன் 

Thursday, 17 November 2011

படித்ததில் பிடித்தது..


சிந்திக்க சில விஷயங்கள்... {கேவலமான உண்மைகள்.}


1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!

கடவுள்

அவருக்கு எதிராக 
ஆயிரம் கேள்விகளை 
நான் வைத்திருப்பதால் 
அவருக்கு ஆதரவாக 
பதில் வைக்க ஒருவனை 
தேடிக் கொண்டிருக்கிறார் 
அந்த அப்பாவிக் கடவுள்....!

உனக்காக..!

உனக்காக மலையாளம் 
படிக்க முடிந்த 
என்னால்  
உன் மனதை படிக்க முடிவதில்லை...! 

                           -மணி மைந்தன் 

காதலர்கள்..!

தமிழும்
மலையாளமும் போல 
நீயும்
நானும்
ரகசிய காதலர்கள்....!
             _ மணி மைந்தன்  

கவிதை

மலையாள கவிதை ஒன்று 
என்னை தமிழ் கவிதை
எழுத வைத்து கொண்டிருக்கிறது........!
                             -மணி மைந்தன் 

தென்றல் நகரில் ஒரு தென்றல்

நீ
வசிக்கும் பகுதியின் பெயர்
தென்றல் நகராமே....
ஆம்
தென்றல் வசிக்கும் பகுதிக்கு
தென்றல் நகர்   என்றுதான்
பெயர்   வைப்பார்கள்.....!
             -மணி மைந்தன்                    

Wednesday, 16 November 2011

நான் என்ன எழுத வேண்டும்?

எனக்கு தெரியாது, ஆனால் நான் என் அன்றாட வாழ்க்கையை பற்றி ஏதாவது எழுத முயற்சி செய்கிறேன்,,,,,,,,,
எனக்கு உங்கள் ஆதரவு கொடுக்க செய்யவும்,,,,,,,
நன்றி .......