Wednesday, 8 October 2014

பற்றி எரிகிறது தியாகம்

நேற்று முன்தினம் மாலை அந்த செய்தி இடிபோல வந்து இறங்கியது...
திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில்., ஊரின் பெயரிலேயே கோவிலைக்கொண்ட மாநகர் எங்கள் ஊர்...!
   பொதுவாக எல்லோரும் வேண்டுதலுக்காக கொல்லங்குடிக்கு வரும் தருணத்தில் நான் மட்டும் அமைதி வேண்டி தஞ்சம் புகும் கோவில்...
கோவிலின் வரலாற்றை நான் இந்நேரத்தில் விளக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது உங்களுடைய வரலாற்றுப்பிழை...!
மாமன்னர் மருதுபாண்டியர்கள் இருவரும் தங்கள் உயிரை வெள்ளையனிடம் கொடுத்துவிட்டு மீட்டுத்தந்த கோபுரங்கள்...!
ஊரின் எந்தக் கடைக்குள் நுழைந்தாலும், எந்த சுபநிகழ் வு என்றாலும் இரட்டைக்கோபுரங்களின் படம் இருக்கும்..
அத்தகைய கோபுரம்தான் நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதாக செய்தி வந்தவுடன் அ.தி.மு.க.வினர் வைத்த வெடியில் தீப்பொறி பரவி கோவில் கோபுரத்தில் பட்டு தீ பரவியுள்ளது..
நான் அங்கு போய்சேரும்போது கிட்டதட்ட பாதிக்கோபுரம் எரிந்தநிலையில் தீ பக்கத்து கோபுரத்திற்கும் பரவி விட்டது..

சிவகங்கைச் சீமையிலேயே உயரமான கோபுரமாயிருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து கட்டினார்களாம் காளையார்கோயில் கோபுரத்தை. மருதிருவரும் சீமை முழுதும் சென்று மண்ணெடுத்து சுட்டுப் பார்த்து கடைசியில் மானாமதுரையில் சுட்ட செங்கல்தான் உறுதியாய் இருக்கிறது என்று மானாமதுரையை அடுத்த கருமலையில் இருந்து கல் அறுத்து கொண்டு வந்து அந்த கோபுரம்  எழுப்பப்பட்டதாம். 

சீமையின் மன்னர் முத்துவடுக நாதரும், அவரது இரண்டாவது மனைவி கெளரி நாச்சியாரும் காளையார்கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது குள்ளநரித்தனமாக கோயிலை சுற்றி வளைத்ததாம் வெள்ளையர் படை, அப்போது பான்சோர் என்னும் பரங்கியரின் தளபதி தனது கைத்துப்பாக்கியால் மன்னரையும் ராணியையும் சுட்டுக் கொன்றானாம். முத்து வடுகநாத சேதுபதியின் இரத்தம் பட்டு இன்னும் சிவந்து போனதாம் காளையார் கோயிலின் செம்மண். மருதிருவரும் வெள்ளையரின் சூழ்ச்சியில் சிக்குண்டு தலைமறைவாயிருந்த போது தலைமறைவை விட்டு வெளியே வந்து அவர்கள் சரணடையா விட்டால் காளையார்கோயில் கோபுரத்தை தகர்த்தெறிவோம் என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியம் மிரட்டல் அறிவுப்பு செய்ய....

நாங்கள் வீழ்ந்தாலும் வீழ்வோம் நாங்கள் சார்ந்திருக்கும் சைவத்தை வீழச் செய்ய மாட்டோம் என்று சைவ சமயத்தின் அடையாளமாய் இன்றும் விண்ணுயர்ந்து நிற்கும் காளையார்கோயிலை காக்க மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் வெள்ளையரிடம் சரணடைந்தனராம். 1801ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருதிருவரையும் தூக்கிலிட்டு அவர்களது தலையை காளையார் கோயில் சின்ன கோபுரத்திற்கு நேர் எதிரேயும் உடலை திருப்பத்தூரில் புதைத்தனராம் வெள்ளையர்கள்.

காளையார்கோயில் வெறுமனே ஒரு வழிபாடு செய்யும் மதம் சார்ந்த கோயில் மட்டும் அல்ல அதற்குப் பின்னால் வீரம் செறிந்த தமிழ் இனத்தின் மிகப்பெரிய போரட்ட வரலாறும் இருக்கிறது.  " வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும்..." என்று வெள்ளையரின் ஏகாதிபத்தியத்தியத்தை எதிர்த்து முதல் கலகக்குரல் எழுப்பியவர் மன்னர் முத்துவடுகநாத சேதுபதி, அதே போல சுதந்திர இந்தியாவில் வெள்ளையரை எதிர்த்து களமிறங்கிய முதல் வீரப் பெண்மணி அவரது மனைவி ராணி வீரமங்கை வேலு நாச்சியார்.

பண்டைய வீர வரலாற்றை நமக்காக விட்டு வைத்து சென்ற வீர மறவர்களைப் போல இல்லாமல் தற்போதைய தமிழ் சமூகம் சுருங்கிப் போய் டாஸ்மாக் தமிழர்களாக உருமாறி அரசியல் கட்சிகளுக்குள் தஞ்சம் புகுந்து கொண்டு வாழ்கவுக்கும் ஒழிகவுக்கும் இடையே அவலமாய் வாழ்ந்து கொண்டிருப்பதோடு  ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை நமது அடுத்த தலைமுறையினருக்கு உருவாக்கியும் வைத்திருக்கிறது. வரலாற்றுச் சின்னங்களின் புனிதமறியாவிட்டாலும் அவற்றைப் போற்றி புகழ் பாடாவிட்டாலும் கூட பரவாயில்லை அதை பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடத் தெரியாத தற்கால சமூகச் சூழலில் தமிழர்கள் என்று அறிவித்துக் கொள்பவர்கள் கூட நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே என்பதுதான் என் போன்றோர்களுக்கு வெட்கமாயிருக்கிறது.

--வருத்தத்துடன் மணிமைந்தன்


(நன்றி. தேவா சுப்பையா.)

Monday, 2 September 2013

ஆண் திமிர் அடக்கு.......!

ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் வலைப்பக்கம் வரக் காரணமான பதிவு இது......

பெண்களின் மீதான வன்முறைகள் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே போவதும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கயவர்களை காப்பாற்றுவது போல் அரசு செயல்படுவதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது....
கடந்த வருடம் இறுதியில் டெல்லியில் நடைபெற்றது போல் , கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது போல் தினம் தினம் ஏதாவதொரு மூலையில் வன்முறைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன....
ஒரு சராசரி மனிதனாக அனைத்து தவறுகளையும் நம்மால் திருத்த முடியவில்லை என்றாலும் ஒவ்வொரு ஆணும் தன்னையாவது திருத்திக் கொள்ள முன்வரவேண்டும்.....
வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தன்னுடைய கீழ்த்தரமான புத்தியைக் காட்டும் எத்தனையோ ஆண்கள் சகோதரத்துவத்துடன் நடந்துகொள்ள வேண்டும்....
பெரும்பாலான தவறுகள் பெண்ணை கேலி செய்வதிலிருந்துதான் தொடங்குகின்றன......
ஆண் என்ற அதிகார சட்டையை கழற்றிவிட்டு அனைத்து பெண்களையும் சகமனிதராக ஒரு ஆண்  மதிக்கும் நாளில்தான் இந்தப் பிரச்சினைகள் முற்றிலும் ஒடுங்கும்......
                                                                         சகோதரன் மணி மைந்தன் 

Friday, 6 July 2012

நில் கவனி காதலி..!

அமாவாசை இரவில்கூட
நிலாச்சோறு சாப்பிடலாம்.....
அருகில் நீ இருந்தால்......
                                                                 
                                                                   

உன் தங்க நிறத்துக்காக மட்டுமல்ல
உன் தங்க குணத்துக்காகவும்
எழுதித் தரலாம் தமிழ்நாட்டை....


      
                                                                         
ரசிகனாகவே இருந்துவிட
நான் தயார்...
கடைசிவரை நான் ரசிக்கும்
கவிதையாக
நீ இருப்பாயேனில்..... 
                                                                        
                                                                                              -மணி மைந்தன்

Monday, 30 April 2012

காதல் கடிதம்..!

அழகான தேவதைக்கு,
என்றுதான் உனக்கான எனது கடிதத்தை துவங்குகிறேன். ஏனெனில் உன் பெயர் தெரியாத தருணங்களில் உனக்கு நான் வைத்திட்ட  பெயர் அதுதான்..
                                                                             

பொதுவாக எனக்கு பேருந்து பயணங்கள் பிடிப்பதில்லை,ஏனெனில் சுதந்திரமாக நடக்க முடியாது.... நிம்மதியாக அமர முடியாது, ஆனாலும் உனக்காக எனது பயணங்கள் நீண்டு கொண்டே போயிருக்கின்றன... அந்தப் பயணங்களில் உனக்காக நான் பலமுறை கை வலிக்க , கால் கடுக்க பேருந்தில் தொங்கியிருக்கிறேன். அப்பொழுதும் கூட என்னுடைய பாதுகாப்பு வளையம் உன்னைச் சுற்றியே இருக்கும்... 

                                                                          
அந்தப் பயணங்களுக்கான  அர்த்தம் கற்பித்தவள்  நீ. உனக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நாம் பயணம் செய்த அந்த வழியில் நாம் தினமும் ஒரு சிறிய கோவிலைக் கடக்க வேண்டியது வரும். அந்த கோவிலில் காசை எடுத்து வீசினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை .



ஒருநாள் பொழுது அந்தப் பயங்கரப் பயணத்தில் உனக்காக நான் ஒரு, ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வீசினேன் .எதற்காக வீசினேன் ?, என்ன நினைத்துக் கொண்டு வீசினேன் என்பதெல்லாம் எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை .ஒருவேளை நீ என்னை அங்கீகரித்தால் உனக்காக நான் வீசிய அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மீட்டெடுத்து உன் கையில் கொடுத்தால் எவ்வழவு மகிழ்ச்சியாய் இருப்பாய் எண்டு நினைக்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.. ஆனால் இன்னமும்  புதைந்து  கிடக்கிறது எனது விருப்பமும், காதலும், அந்த நாணயமும்...!

                                                                           
நீயோ இன்று என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாய் , ஆனாலும் உன் மீதான என் காதல் மழை இன்னமும் பெய்து கொண்டேதான் இருக்கிறது.  நீ குடை கொண்டுவர மறந்திட்டா நாட்களில் மட்டுமே என் மழை உனக்குப் புரிகிறது.. என்ன செய்ய? நீ இன்று குடையோடு போகிறாய்...




குதிரையாக உன் நினைவு, அதன் மேல் சவாரி செய்யும் நோஞ்சான் வீரனாக நான்...இப்பொழுது நான் உன்னிடமிருந்து விலகியும், விலகாமலும் இருந்து கொள்கிறேன்.  பரவாயில்லை, நான் தோற்றவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்... நான் உன்னிடம் ஏமாந்தவனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.. 
நீயாவது ஜெயித்தாயா? எந்த ஒரு இழிசொல்லையும் தாங்காது அழுதிட்ட நீதானா அது? என்னைத் தவிர மற்ற அனைவருக்காகவும் இரக்கப்பட்ட நீதானா அது? காலைப் பொழுதுகளில் பள்ளிக்கு கிளம்பி உன்னுடன் பயணிக்க வைத்திட்ட நீதானா அது?
 உனக்கான அடையாளங்களை நீ  எங்கு தொலைத்துவிட்டாய் ?    நெற்றிபரப்பில் பதியமிட்டிருக்கும் உன் அழகிய பொட்டு எங்கு விழுந்தது?
கடைசியில் என்னுடைய உன்னை நீ எங்கே தொலைத்து விட்டாய்?


நான் என்ன பெரிய இவன்? நான் நானாக இருக்கிறேன். என்னை நான் இகழ்கிறேன், பரிகசிக்கிறேன், ரசிக்கிறேன், காதலிக்கிறேன். ஏனெனில் நானொரு கற்பனாவாதி, கவிஞன். அன்றும் இன்றும் நே என் மனதில் வந்து போனபடியே இருந்தாய், இனியும் இருப்பாய். இதனால் நீ என்னைக் கிறுக்கன் என்று நினைத்து விட்டாய் என்று எண்ணுகிறேன்.

                                                                         


இப்போது நீ என்னை விரும்பாமல் போகலாம், என்னைப் பற்றிய நினைவு உனக்கு வெறுப்பை ஊட்டலாம். ஆனால் என்னுடைய உள்மனதில் உன்மீதான என் பிரியங்களும், எந்தன் காதல் உணர்வும்,ஆற்று மணலாய் , மென்மையாய்,  நகராமல்  ஒரு அழகான ஓவியமாய் படிந்து இருக்கின்றன.. 
உனக்கு நீச்சல் அடிக்கத் தெரிந்தால் அந்த மணலை நீ காணலாம், ஒரு பிடி அள்ளிப் போகலாம், உனக்கு நீச்சல் அடிக்கத் தெரியாதது எப்படி என் குற்றமாகும்? நீ என்னைச் செருக்குடையவன் என்று நினைக்கிறாய். சரி! இருந்து விட்டுப் போகட்டும். அதில் என்ன தவறு? சொல்லப் போனால் இந்தச் செருக்கு உன் காதலன் என்ற காரணத்தினால் எனக்கு வந்திருக்கலாம்.




பொறுப்பற்றவன், கேவலமானவன், தோற்றவன்,  லாயக்கற்றவன் கோபக்காரன் என்று எத்தனையோ சொல்லிவிட்டுப் போ.. காதல் என்றால் என்ன?என்று என் நண்பன் ஒருநாள் கேட்டான். இப்போது சொல்கிறேன்.
' காதல் கடக்கும்போது இனிக்கிறது, கடந்தபின் கசக்கிறது'

                                                                       

என்றாவது ஒருநாள் நாம் பயணம் செய்த அந்த வழியாக நீ செல்லக் கூடும். அன்று  உனக்காக நான் வீசிய ஒற்றை ரூபாய் நாணயம் புதைந்த மணலை நீ காணக் கூடும். நன்றாக உற்றுப் பார்! அங்கு எஞ்சியிருப்பது என்னுடைய காதல் மட்டும்தான்..                



                                                                                                        உன் மீது பிரியமுள்ள 
                                                                                                                 சேவகன்    
நன்றி : விகடன்


(அந்த சிறிய கோவிலின் பெயர் அரைக்காசு காளியம்மன் கோவில், தொன்டி-மதுரை நெடுஞ்சாலையில் சிவகங்கைக்கு அருகில் பையூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.)

Monday, 23 April 2012

வரம் நீ...



 ஆண்டவனிடம் நான்
அழுது வேண்டிய
ஒரே வரம் நீ...
அவன்
அளிக்க மறந்திட்ட
வரமும் நீயே....
                           -மணி மைந்தன்.

Wednesday, 4 April 2012

உனக்கானவை...

 

 படிக்காமலே புரிந்துகொள்கிறார்கள் 
 என் கவி ரசிகைகள்....
 அத்தனை கவிதைகளும் 
உனக்கானவை என்பதை...!
                     =மணி மைந்தன்

Saturday, 24 March 2012

என் நாட்குறிப்பு......!



உன்னைக் காணாத நாட்களின்
வெறுமையான  பக்கங்களில் 
உனக்கானதொரு
கவி எழுதி 
நிரப்பச் சொல்லி நச்சரிக்கிறது 
என் நாட்குறிப்பு......!
-மணி மைந்தன்